Modi: ``தமிழ் குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்" - பிரதமர் பேசியதென்ன?
இன்றைய (29.12.2024) மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி கற்கும் திட்டம் தொடங்கியிருப்பது குறித்து பேசிய பிரதமர், தமிழ் மொழி குறித்து நாட்டில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், "தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி, இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதில் பெருமைகொள்ள வேண்டும். உலகம் முழுவதிலிருந்தும் தமிழைக் கற்றுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"கடந்த மாத இறுதியில் ஃபிஜி நாட்டில் இந்திய அரசின் உதவியுடன் தமிழ் கற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டிகளில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஃபிஜியில் தமிழ் கற்றுக்கொடுப்பது இதுவே முதன்முறை.
ஃபிஜியில் உள்ள இன்றைய மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ளா ஆர்வமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நிகழ்வுகள், சம்பவங்கள் வெறும் வெற்றிக்கதை அல்ல. இதன்மூலமே நம் கலாச்சாரமும் பண்பாடும் தொடருகிறது. இந்த உதாரணங்கள் நம்மைப் பெருமையால் நிரப்புகின்றன. கலைகள் முதல் ஆயுர்வேதம் வரை, மொழி முதல் இசை வரை தென்னிந்தியாவில் பல விஷயங்கள் உள்ளன. அவற்றால் உலக அரங்கில் முத்திரை பதித்து வருகிறது" என்று தெரிவித்தார்.