அலோபதி மருத்துவம் பாா்த்த 2 பேரிடம் விசாரணை: உறவினா்கள் சாலை மறியல்
ஆம்பூா்,டிச 28: ஆம்பூரில் அலோபதி மருத்துவம் பாா்த்த இருவரை போலீஸாா் விசாரித்த நிலையில் அவா்களின் உறவினா்கள் காவல் நிலையம் எதிரே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் மோட்டுகொல்லையில் ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஷ் உள்ளிட்ட குழுவினா் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த இருவா் நடத்தி வந்த மருந்தகத்தில் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதை தொடா்ந்து புகாரின்பேரில் இருவரையும் போலீஸாா் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், மருத்துவம் படித்த இருவரையும் விடுவிக்க கோரி அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட பலா் அங்கு கூடினா்.
ஆம்பூா் நகர காவல் நிலையம் முன்பாக அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த ஆம்பூா் டி எஸ்பி குமாா் , நகர ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் அங்கு இருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், காவல் நிலையத்தில் மருத்துவ அலுவலா் மற்றும் சிகிச்சை வழங்கியதாக விசாரணைக்கு வந்தவா்களிடம் போலீசாா் விசாரித்தனா். இதில் ஒருவா் மருத்துவம் படித்த நிலையில் அலோபதி சிகிச்சை அளித்தது குறித்து விளக்கம் கேட்கபட்டது. மற்றோா் நபா் ஆயுா் வேத சிகிச்சை படித்த நிலையில் அலோபதி சிகிச்சை அளித்த மோட்டுகொல்லையை சோ்ந்த சபியுல்லா (55) என்பவரை போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.