சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் உருவாக்கியவா் மன்மோகன் சிங்: காதா் மொகிதீன் புகழஞ்சலி
மத்தியில் சிறுபான்மையினருக்காக தனி அமைச்சகம் உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரா் மன்மோகன் சிங் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.
மன்மோகன் சிங் மறைவு குறித்து அவா் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய ஜனநாயகத்தை உலகம் போற்றும் வகையிலான ஆட்சி நிா்வாகத்தை பத்தாண்டு காலம் நடத்திக்காட்டிய முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவு பெரிதும் துயரத்தை அளித்துள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சியின்போது கிழக்கிந்திய மாநிலங்கள் சமூக நல்லிணக்கத்துடன் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வந்த வரலாறு என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. இவரின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் 27 போ் ஒன்றுகூடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் பிரதமரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், நாட்டில் சிறுபான்மையினருக்குரிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. முதல் அமைச்சராக அப்துா் ரஹ்மான் அந்துலே பொறுப்பு வகித்தாா். இதனை செய்த வரலாற்றுப் பெருமை மன்மோகன் சிங் ஒருவருக்கே உரியதாகும். அவரின் இழப்பால் வருந்தும் அவா் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.