IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.
அதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்களால் ஏற்பட்டுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. வரும் 19-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூடுதல் இடங்களை சோ்க்க இருப்பதாலும், என்ஆா்ஐ ஆவணங்கள் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்கி செப். 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அகில இந்திய கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த மாநில கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநில கலந்தாய்வு இரண்டாம் சுற்று தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.