எலான் எனும் எந்திரன் 9 : `நீங்கள் அறிவாளியா… இல்லை முட்டாளா?’ - மஸ்க் தெறிக்கவிட்ட முத்துக்கள்
லண்டணிலிருந்து நியூயார்க் நகரத்துக்கான விமான பயணம் சுமார் 8 மணி நேரம் ஆகலாம். ஆனால் இப்பயணத்தை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சுமார் 30 நிமிடத்தில் நிறைவு செய்யலாம் என்கிறார் எலான் மஸ்க். இதைக் கேட்க எப்படி இருக்கிறது. அறிவியலையே அலறவிடுவது போலிருக்கிறதல்லவா…? எலான் மஸ்க் மீது பெரும் மரியாதையும் வியப்பும் தோன்றுகிறதல்லவா…?
ஆனால் இதே மனிதர் தான் கொரோனா ஒரு பெரிய பிரச்னையே இல்லை, சளி ஜலதோசத்தின் ஒரு பிரத்யேக வகை என தன் டெஸ்லா பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டார். அதோடு ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 0.1%க்கும் குறைவான மக்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும் எனவும் கணித்து உலக விஞ்ஞானிகளின் உழைப்பையும், கணிப்பையும் கொச்சைப்படுத்தினார். மேலும் 2020 ஏப்ரலுக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகிவிடும் எனவும் கணித்தார். குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படாது எனவும் விட்டடித்தார்.
உலகமே 2020தொடக்கத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, தன் டெஸ்லா ஊழியர்களை வேலைக்கு வரக் கட்டாயப்படுத்தியவர் எலான் மஸ்க். பின்னாளில் இதற்கான விசாரணைகளையும் எதிர்கொண்டார்.
கொரோனா உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த போது, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தருவதாகச் சொன்ன எலான் மஸ்க், கடைசியில் BiPAP & CPAP ரஎந்திரங்களை மட்டுமே வாங்கிக் கொடுத்தார்.
இதை எல்லாம் விட, 2020-ல் கொரோனா தடுப்பூசியை தானோ, தன் குடும்பமோ எடுத்துக் கொள்ளாது, எங்களுக்கு கொரோனா அபாயம் இல்லை என்று கூறினார். ஆனால் 2020 பிற்பகுதியில் எலானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது, தான் பயன்படுத்திய கொரோனா பரிசோதனைக் கருவி மீதே குற்றம்சாட்டினார். 2021 டிசம்பரில் தானும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதியான தன் பிள்ளைகளும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்தார்.
2018ல் எலான் மஸ்க் ராயல் சொசைட்டி அமைப்பில் உறுப்பினரானார். எலானின் அறிவியல் விரோதப் போக்கு மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவதைச் சுட்டிக் காட்டி, அவ்வமைப்பிலிருந்த 74 உறுப்பினர்கள் தங்கள் கண்டணத்தைப் பதிவு செய்தனர்.
எல்லா பணியாளர்களையும் கிட்டத்தட்ட தனித்தனியாக கண்காணித்து வேலை வாங்கும் பழக்கம் கொண்டவர் எலான் மஸ்க். தனக்குப் பிடிக்காத ஊழியர்களை, தான் எதிர்பார்ப்பது போல வேலை செய்யாத ஊழியர்களை பெரிய ஆர்ப்பாட்டமின்றி திடீரென வேலையை விட்டுத் தூக்கும் பழக்கம் கொண்டவர்.
அதே போல, தன் ஊழியர்கள் ஒவ்வொருநாளும் நீண்ட நெடுநேரம் வேலை பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் எலான் மஸ்க். மிக முக்கியமாக, தன்னோடு பணியாற்றும் பலரோடும், Non - Disclosure ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் வேலைக்கே சேர்ப்பாராம்.
சகப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத எலான், தன்னுடன் பணியாற்றிய ஷிவான் சில்லிஸ் என்கிற பெண்மணியோடு சில குழந்தைகளைக் பெற்றுக் கொண்டார்.
மேலும், 2021 காலத்தில், கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனரான செர்ஜி பிரின்னின் மனைவி நிகோல் ஷனஹனுக்கும் எலான் மஸ்குக்கும் தொடர்பு இருந்ததா கடந்த 2022 ஜூலையில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து செர்ஜி பிரின் & நிகோல் ஷனஹனுக்கு மத்தியிலான திருமண உறவு முறிந்தது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா பசெட் (Natasha Bassett) தன்னுடைய “Occasional Girlfriend” என்று கூறியதும், சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி பெண்கள் தொடர்பான விஷயங்களில் அவ்வப்போது எலான் மஸ்கின் பெயர் தலைப்புச் செய்தி ஆவது தொடர் கதையே.
தம் லாங் என்கிற தாய்லாந்து குகையில் சிறுவர்கள் மாட்டிக் கொண்ட சம்பவம் நினைவிருக்கிறதா…? சிறுவர்களை மீட்க எலான் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை தயார் செய்து கொடுத்தார். பல்வேறு காரணங்களுக்காக, அதை தாய்லாந்து அரசு பயன்படுத்தவில்லை.
சிறுவர்கள் மீட்புப் பணியில் பேருதவியாக இருந்த பிரிட்டனைச் சேர்ந்த வெர்னான் அன்ஸ்வொர்த், எலானின் நீர்மூழ்கிக் கப்பலை ஆக்கப்பூர்வமாக விமர்சித்தார். எலானுக்கு தம் லாங் குகை எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை என்றார்.
அதற்கு எலான் மச்க், வெர்னானை “Pedo Guy” குழந்தைகளுக்கு எதிராக தவறாக நடந்து கொள்பவர் என விமர்சித்தார். பின்னாளில் இதற்காக வெர்னானிடம் மன்னிப்பும் கேட்டார். ஒரு சாமானியர், ஒரு உலகப் பணக்காரரை விமர்சித்ததர்காக, அவரே குழாயடிச் சண்டையில் இறங்கியதை உலகம் பார்த்து வியந்தது.
இப்படி தரை லோக்கலாக இறங்கி அடிப்பது, இணைய டிரோலில் பங்கெடுப்பது போன்ற வேலைகளை, கடந்த சில ஆண்டுகளாக எலான் மஸ்க் தொடர்ந்து பலருக்கும் செய்து வருகிறார். குறிப்பாக தான் நடத்திக் கொண்டிருக்கும் எக்ஸ் வலை தளத்தில் அவருக்கு பிடிக்காதவர்களை விமர்சிப்பதை அடிக்கடிப் பார்க்கலாம்.
எலான் மஸ்கின் மகனாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக மாறிய விவியன் ஜென்னா வில்சன், தன் பெயரில் இருந்த மஸ்க் என்கிற பெயரையே நீக்குமளவுக்கு அப்பா மகளுக்கிடையிலான உறவு அத்தனை சிறப்பு. LGBTQ சமூகத்தினரை விமர்சிப்பது, அவர்கள் தங்களை அழைத்துக் கொள்வதை விமர்சிப்பது என எலான் எதையும் மிச்சம் விட்டுவைக்கவில்லை.
என் மகனை Wokeism கொன்றுவிட்டது என விழிப்புணர்வின் மீது அத்தனை வெறுப்பு கொட்டினார் எலான். அதோடு தனக்கு எதிரான, தனக்குப் பிடிக்காத சித்தாந்தங்களையும் கடுமையாக விமர்சிப்பதில் எலான் மஸ்க் போன்ற பணக்காரர்கள் எவருமில்லை.
உலகம் முழுக்க, சோலார் எரிசக்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும், ஏஐ & கால நிலை மாற்றம் தான் உலகின் மிகப்பெரிய அபாயங்களெனச் சொல்லும் அதே எலான் மஸ்க் தான்… பொதுப் போக்குவரத்து வசதிகளை கடுமையாக விமர்சித்தார். அதற்கு மாறாக தனிநபர்கள் தங்களுக்கென தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றார்.
இது ஒரு மேல்தட்டு மனநிலை என அப்போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதோடு நகர்புற வசதிகளைத் திட்டமிடும் நிபுணர்கள் எலான் மஸ்கின் கருத்து தவறென வாதிட்டனர். பொதுப் போக்குவரத்து வசதிகள் தான் மக்கள் அடர்த்தியாக வாழும் நகர்புறங்களுக்கான போக்குவரத்துத் தீர்வாக இருக்கும். இதனால் எரிசக்தி பயன்பாடு குறையும், போக்குவரத்துக்காக மக்கள் செலவழிக்கும் தொகை, சாலை பயன்பாடு என எல்லாமே பொதுப் போக்குவரத்தில் தான் சிக்கனமாகப் பயன்படுத்த முடியுமென்றனர்.
ஒரு நொடியில் அறிவியல் மேதையாகத் தெரியும் எலான், அடுத்த நொடி அடிப்படை அறிவியலையே மறுக்கிறார். தான் அரசியல் சார்பற்றவன் எனச் சொல்லிக் கொண்டிருந்த எலான் மஸ்க் தான், இந்த 2024 தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு தன் ஆதரவை வாரி வழங்கினார். காரணம் என்ன..? அடுத்த அத்தியாயத்தில்.