விண்வெளித்துறையில் பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
‘ஏஐ’ போட்டியில் இந்தியா: விரைவில் தற்சாா்பு மாதிரிகள் உருவாக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்
அமெரிக்காவின் ‘சாட்ஜிபிடி’, சீனாவின் ‘டீப்சீக்’ போன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் தனக்கென தற்சாா்பு மாதிரிகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது: உலகத் தரத்தில் அதிநவீன ஏஐ மாதிரிகள் இந்தியாவிலேயே உருவாக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இயந்திரக் கற்றல், விடியோ தொகுப்பு என அதிவேக செயல்பாடுகளைக் கொண்ட 18,693 கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட்டுகளை (ஜிபியு) ஜியோ, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.
‘இந்தியாவுக்காக, இந்திய மக்களுக்காக, இந்தியாவினுடையதாக’ என்ற அடிப்படையில் இந்திய மொழிகள், கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளீடு செய்யப்படவுள்ளன. இது எவ்வித பாகுபாடும் இல்லாமல் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்கூறிய ஜிபியுக்களால் மேம்படுத்தப்படும் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்ற நாடுகளைவிட மிகக் குறைவான விலையில் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. அனைவரும் அணுகக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் பொருளாதார எண்ணம்.
அடுத்த 8 முதல் 10 மாதங்களில் குறைந்தபட்சம் 6 ஏஐ புத்தாக்க நிறுவனங்கள் அடிப்படை மாதிரிகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 4 முதல் 6 மாதங்களில்கூட இவை நிறைவேறும் வாய்ப்புள்ளது.
ஏஐ கணினி உள்கட்டமைப்பில் 10,000 ஜிபியுக்களை செயல்படுத்தும் இந்திய ஏஐ இயக்கத்தை வலுப்படுத்த ரூ.10,732 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டீப்சீக்கை மிஞ்சிவிடும்:
டீப்சிக்கின் ஏஐ மாதிரி 2,000 ஜிபியுக்களால் பயிற்சியளிக்கப்பட்டது. அதை ஒப்பிடும்போது இந்தியாவில் 18,693 ஜிபியுக்களால் பயிற்சியளிக்கப்பட்டு அதிவேக சேவைகள் வழங்கப்படும்.
நாட்டில் தயாரிக்கப்படும் ஏஐ மாதிரிகளைக் கொண்டு வேளாண்மை, சுகாதாரம், கல்வி, பருவநிலை, வானிலை உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான முதல்கட்ட விண்ணப்பங்கள் அரசால் பெறப்பட்டன. வேளாண்மை, கற்றல் குறைபாடு, பருவநிலை மாற்றம் ஆகிய கருப்பொருள்களின்கீழ் முதல்கட்டமாக 18 விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இயந்திரக் கற்றல் (ஐஐடி ஜோத்பூா்), செயற்கை தரவு (ஐஐடி ரூா்கி), பாகுபாடற்ற ஏஐ நடைமுறை, விரிவுபடுத்தப்பட்ட ஏஐ கட்டமைப்பு (மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம், புணே), தனியுரிமை பாதுகாப்பு மேம்பாடு (ஐஐடி, தில்லி மற்றும் ஐஐஐடி தில்லி) உள்ளிட்ட துறைகளில் பணிசாா்ந்த திட்டங்கள் நடைபெறும் என்றாா்.
இந்தியாவில் டீப்சீக்:
டீப்சீக் ஏஐ மாதிரி மையக்கட்டுப்பாட்டில் இயங்குவது அல்ல; அதிலுள்ள தரவுகள், தகவல்களை மாற்றியமைக்க முடியும் (ஓபன் சோா்ஸ் மாடல்). இதுபோன்ற ஏஐ மாதிரிகள் இந்தியாவில் பயன்படுத்த தடைகள் இல்லை. அவை தனியுரிமைகளைப் பாதிக்காதவாறு செயல்படுத்துவதே அடுத்தகட்ட பணி என்றாா்.