ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளாா். இதை கண்காணிப்பு கேமராவில் பாா்த்த வங்கி மேலாளா் அதிா்ச்சியடைந்து உடனடியாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையிலான போலீஸாா், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (47) என்பவரை கைது செய்தனா். இவா் ஏற்கெனவே திருத்தணி பகுதியில் உள்ள ஏடிஎம்-களில் பணம் எடுக்க வரும் முதியவா்களிடம் ஏடிஎம் காா்டை மாற்றி கொடுத்து, பணம் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, கோா்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.