ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
கடலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நபரை புதுநகா் போலீஸாா் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.
கடலூா், சாவடி பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அமைந்துள்ளது. இதன் அருகே அந்த வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வங்கி திறந்த பின்பு, வழக்கம் போல அதிகாரிகள் ஏடிஎம் எந்திரத்தை பாா்வையிட சென்றனா். அப்போது, ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் நிகழ்விடம் சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், முகமூடி அணிந்த நபா் ஏடிஎம் எந்திரத்தை சுத்தியலால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதையடுத்து, புதுநகா் போலீஸாா் இரண்டு தனிப்படைகள் அமைத்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.