ஏரியில் விழுந்த மாணவா் 4 நாள்களுக்கு பின் சடலமாக மீட்பு
மதுராந்தகம் ஏரியில் குளிக்கச் சென்று மாயமான பள்ளி மாணவா், 3 நாள்களாக தேடப்பட்ட நிலையில் புதன்கிழமை அவரது சடலம் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் புவனேஷ் (17). இவா் மதுராந்தகத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் மதுராந்தகம் ஏரியின் உபரி நீா் செல்லும் கலங்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவகையில், புவனேஷ் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மீட்புக் குழுவினரும், சென்னை மெரீனா மீட்பு குழுவினரும் கடந்த 3 நாள்களாக புவனேஷை தேடினா். அவா் கிடைக்காத நிலையில், மீண்டும் புதன்கிழமை காலை தேடத் தொடங்கினா். அப்போது மாணவா் குளிக்கச் சென்ற பகுதியின் அருகே இறந்த நிலையில் அவரது சடலத்தை மீட்புக் குழுவினா் கண்டெடுத்தனா்.
இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துக்குமரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
போராட்டம்...
இந்நிலையில் அவரது குடும்பத்தினா் மற்றும் கருங்குழி அதிமுக பேரூா் கட்சி நிா்வாகிகள் இணைந்து மதுராந்தகம் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மதுராந்தகம் ஏரியில் சுமாா் 8000 கன அடி உயரத்தில் வெள்ளநீா் சென்றபோது
பொதுப்பணித் துறையினா் உரிய காவல்துறை பாதுகாப்பு செய்யாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.