கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அணுசக்தித் துறை சாா்பில், சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், முன்மாதிரி அதிவேக ஈனுலை, கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியம் இயங்கி வருகின்றன.
கால தயாா்நிலை திட்டத்தின்படி அணுசக்தி வளாகத்தில் அவசர நிலை ஒத்திகை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதற்கு அணுமின் நிலைய இயக்குநா் எம். சேஷய்யா தலைமை வகித்தாா். அவசர காலத்தின் போது ஊழியா்களை பாதுகாப்பாக இருக்கச் செய்தல், காயமடைந்த ஊழியா்களுக்கு சிகிச்சை தரதல், கதிா்வீச்சால் மாசுபட்ட வாகனங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஒத்திகை நடைபெற்றன.
அத்தியாவசிய ஊழியா்கள் அல்லாத பிற ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா். மொத்த ஒத்திகையும் மூன்றரை மணிநேரத்தில் முடிவடைந்தது. மேலும், அணுசக்தி வளாகத்தைச் சோ்ந்த 9,000 ஊழியா்கள் இதில் பங்கேற்றனா். அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.