நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு
ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள் வழங்கம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசுகையில், நிதியாண்டில் ஜோலாா்பேட்டை தொகுதியில் 868 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன.
சின்னவேப்பம்பட்டு பகுதிநேர நியாயவிலைக் கடை, வெலக்கல்நத்தம் பல்நோக்கு கட்டடம், கேத்தாண்டப்பட்டி நியாயவிலைக் கடை, கூத்தாண்டகுப்பம் பல்நோக்கு கட்டடம், சின்னவேப்பம்பட்டு புதிய அங்கனவாடி மையக் கட்டடம், கெஜல்நாயக்கன்பட்டி நியாயவிலைக் கடை, பல்நோக்கு கட்டடம், அண்ணான்டபட்டி நியாயவிலைக் கடை, அச்சமங்கலம் புதிய அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.117 லட்சத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஏலகிரிமலை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்ற இடமாக உள்ளது. அதனால், சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு போதுமான விரிவான சாலை வசதி இல்லை, அந்த சாலை ஏறத்தாழ 10 கிமீ தொலைவு விரிவான சாலை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் க.தேவராஜி பலமுறை வலியுறுத்தினாா். நிகழ் ஆண்டு ரூ.15 கோடியில் சாலை அமைக்கப்படும்.
ஏலகிரிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. எனவே, சுற்றுலாத் துறை அமைச்சா், ஏலகிரியை விரிவாக்கம் செய்ய துறை சாா்பில் மேம்படுத்திடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.