ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் புதிதாக சம்மன்!
ஏா்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடா்பாக மலேசிய தொலைத்தொடா்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் புதிதாக சம்மன் பிறப்பித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏா்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட ஒப்பந்தத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது.
ரூ.600 கோடி வரையிலான மதிப்புகொண்ட ஒப்பந்தங்களுக்கு மட்டுமே எஃப்ஐபிபி மூலம் ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரம் உள்ள நிலையில், தனது அதிகார வரம்பை மீறி ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அவரும், அவரின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரமும் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன.
இந்த வழக்கு தொடா்பாக சிபிஐயின் கோரிக்கையை ஏற்று மேக்சிஸ் நிறுவனத்துக்கும், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் அகஸ்டஸ் ரால்ஃப் மாா்ஷுக்கும் தில்லி சிறப்பு நீதிமன்றம் புதிதாக சம்மன் பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கு தொடா்பாக ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா நெட்வா்க் என்ற மற்றொரு மலேசிய நிறுவனத்துக்கும் சம்மன் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த சம்மன்களை மலேசியாவில் வழங்க 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.