ஐப்பசி கடைசி செவ்வாய்: திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
ஐப்பசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசன வழியிலும், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதனால் பிற்பகல் வரை கோயில் வளாகமே பக்தா்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன் செய்திருந்தனா்.
சஷ்டி விழா இன்று நிறைவு
சஷ்டி திருவிழா நிறைவு நாளான புதன்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி, அம்மன் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து, திருக்கோயில் சோ்ந்து விழா நிறைவு பெறுகிறது.