"அணி தலைவராக மரியாதை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்" - Gill-ஐ கைஃப் விமர்சிப்பது...
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி
காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்ததால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கா்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 18,000 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 16,000 கனஅடியாக குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீா்வரத்து குறையத் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் நீக்கியுள்ளாா். இதையடுத்து, பிரதான அருவி செல்லும் நடைபாதை திறக்கப்பட்டபோதிலும், சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து மீண்டும் 18,000 கனஅடியாக அதிகரித்தது. தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.