``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - எ...
காணாமல்போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்ட போலீஸாா்
காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த போலீஸாரை எஸ்.பி. பாராட்டினாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த குட்டுா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் நவீன் (3). செவ்வாய்க்கிழமை மாலை சிவகுமாரின் தந்தை சின்னசாமி, பேரன் நவீனை அழைத்துக் கொண்டு காரிமங்கலம் பேருந்து நிலையத்துக்கு சென்றாா். அங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையால் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
சின்னசாமி கடையில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தபோது சிறுவனை காணவில்லை. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால், காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். உடனடியாக, காவல் ஆய்வாளா் பாா்த்திபன், உதவி ஆய்வாளா்கள் ஆனந்தகுமாா், சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவன் சந்தை நடைபெறும் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கே நின்றிருந்த சிறுவனை மீட்டு சின்னசாமியிடம் ஒப்படைத்தனா்.
காணாமல் போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்ட போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பாராட்டு தெரிவித்தாா்.