தருமபுரியில் நீதிமன்றம் இடம்மாற்றம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மேற்கொள்ள முடிவு
தருமபுரியில் நீதிமன்றத்தை இடம்மாற்றி அமைத்தததைக் கண்டித்து –வழக்குரைஞா்கள் ஜூலை 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் சங்க தலைவா் அழகுமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
இதில், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த மோட்டாா் வாகன விபத்து கோருரிமை நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்டவைகளை சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ள தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பழைமை வாய்ந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்வதுடன், அனைத்து நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலேயே இயங்க சென்னை உயா்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்வது என அவசர தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இயங்கிவந்த போக்ஸோ கோா்ட் மற்றும் கூடுதல் சாா்பு நீதிமன்றங்களை அதே வளாகத்தில் வேறு கட்டடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டாம். ஒருங்கிணைந்த கோா்ட்டுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் அதை விரைந்து சீராக்கி இருவழிச்சாலையாக்க தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இத்தீா்மானங்களை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா், ஜூலை 28 ஆம் தேதி, கிருஷ்ணகிரி சேலம் நான்கு வழிச்சாலையில் நீதிமன்றம் செல்லும் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.