Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
தினமணி செய்தி எதிரொலி: பழங்குடியினருக்கு வீட்டுமனை! கோட்டாட்சியா் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
செம்பிராங்குளம் பகுதியில் பளியா் இன பழங்குடியின மக்கள் வீடுகள் இல்லாமல் பல ஆண்டுகளாக கூரை வீடுகளில் வசித்து வருகின்றனா். இதையடுத்து, இந்தப் பகுதி மக்கள் வீட்டுமனை வழங்கக்கோரி, மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பளியா் இன பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு ஆகியோரது முயற்சியால், செம்பிராங்குளம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் 20 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு அந்த இடத்தின் உரிமையாளா் ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அந்த இடத்தில் நடைபெற்று வரும் அளவீடு செய்யும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, தனியாா் இடத்தின் நிறுவன ஆலோசகா் கருணாநிதி, பண்ணைக்காடு குறுவட்ட அலுவலா் அழகுராஜா, வடகவுஞ்சி கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி உள்பட பலா் உடனிருந்தனா்.