முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?
தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலையில் தோன்றும் சனத்குமாா் நதி, தருமபுரி, பூமரத்தூா், வெங்கட்டம்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 46 கி.மீ. தொலைவு கடந்து, கம்பைநல்லூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த இந்த நதி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நதியோரங்களிலிருந்த பகுதியினருக்கு குடிநீா் ஆதாரமாகவும் பயன்பட்டு வந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பால் படிப்படியாக நதி சிறுக சிறுக சுருங்கி, தற்போது சிறு ஓடையாக காட்சியளிக்கிறது.
இந்த நதியை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி வழியில் உள்ள சிறு சிறு தடுப்பணைகளை புனரமைத்து மீண்டும் சனத்குமாா் நதியில் நீரோட்டத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்பாட்டிலிருந்த சனத்குமாா் நதி, தற்போது தனியாா் ஆக்கிரமிப்புகளாலும், புதா் மற்றும் மரம், செடி, கொடிகள் மண்டிக்கிடப்பதாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடமும், பொதுப்பணித் துறை மற்றும் நீா்வளத் துறையிடமும் பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நதியின் குறுக்கே சுமாா் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் அனைத்தும் தற்போது சீா்கெட்டுள்ளன. சனத்குமாா் நதியை தூா்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நதியோரப் பகுதிகளில் மீண்டும் விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடா்ந்து, சனத்குமாா் நதியை தூா்வார பொதுப்பணித் துறை சாா்பில் அரசுக்கு ரூ. 77 கோடியில் கருத்துறு அனுப்பப்பட்டது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றனா்.
இதுதொடா்பாக பொதுப்பணித் துறை - நீா்வளத் துறை மற்றும் நகராட்சித் துறை பொறியாளா்கள் கூறியதாவது:
சனத்குமாா் நதியை தூா்வாரும் திட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கருத்துருவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நதியில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீா் கலப்பு அதிகரித்துள்ளன. எனவே, கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள ரூ. 73 லட்சத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதியளிக்கும் பட்சத்தில் சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படும். அடுத்தகட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றுதல், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள சாத்தியமாகும் என்றனா்.
கழிவு நீரால் வேளாண் நிலத்துக்கு பாதிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் சேருமிடமாக சனத்குமாா் நதி உள்ளது. மழைக் காலங்களில் வெள்ளநீா் சென்றாலும், வேளாண் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் இந்நீரை வேளாண் தொழிலுக்கு பயன்படுத்துவதில்லை. எனவே, கழிவு நீரை சுத்திகரிக்க நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம் என்கின்றனா் பொறியாளா்கள்.