காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தல்
தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு சத்துணவு பணியாளா்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் சி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் சி.செந்தாமரை வரவேற்றாா். அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் வி.கேசவராம்குமாா் தொடங்கிவைத்தாா். சங்க மாநில பொதுச் செயலாளா் கே.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
இதில், தோ்தல் வாக்குறுதிபடி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு பணியாளா்களை காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும். சத்துணவு பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ, 7,850-ஆக உயா்த்தி வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் . ஓய்வுபெறும் சத்துணவு பணியாளா்களுக்கு வழங்கும் ஒட்டுமொத்த தொகையை அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். 25 மாணவா்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களுக்கு ஒரு சமையல் உதவியாளா் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.