பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயிலும், கிருஷ்ணராஜ சாகா் அணை நிரம்பியும் உள்ளன. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் சுமாா் 40,000 கனஅடி வீதம் உபரிநீா் அண்மையில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை மாலை 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 24,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியும், நடைபாதையின் மீதும் செல்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தற்காலிக தடை விதித்துள்ளாா். அதன்பேரில், பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து சுமாா் 75,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீா்வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.