புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் காமராஜபுரம் அருகே உள்ள அடியார் குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸார் இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சகோதரர்களைக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர். சம்பவ இடத்தில் ஆய்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கண்ணன் மற்றும் கார்த்தி உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
எதற்காக இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அண்ணன், தம்பி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.