கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!
சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் காரைக் காணவில்லை. இதுகுறித்து எத்திராஜ் ரத்தினம், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீஸ் டீம், ராஜஸ்தான், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஷெகாவத் (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவரிடம் விசாரித்தபோது கார் திருடுவதை மட்டுமே தொழிலாக செய்து வரும் சத்யேந்திர சிங் ஷெகாவத் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு ஹைடெக்காக கார்களைத் திருடி வடமாநிலங்களில் விற்று சொகுசாக வாழ்வதும் விசாரணையில் தெரியவந்தது.
கண்டுபிடிக்க உதவிய கண்ணாடி துகள்கள்
பிரபல கார் திருடன் சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் பின்னணி குறித்து திருமங்கலம் போலீஸாரிடம் விசாரித்தோம்.
``Toyoto Fortuner காரின் ஓனர் எத்திராஜ் ரத்தினம் புகாரளித்ததும் அவரின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அப்போது கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தன. அதனால் காரின் கண்ணாடியை உடைத்து காரை திருடியிருக்கலாம் என சந்தேகித்தோம். காரைத் திருடியவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினோம். அடுத்து கார் எங்கு செல்கிறது என்பதை அடுத்தடுத்த சிசிடிவி-க்கள் மூலம் ஆய்வு செய்தபோது வடமாநிலத்தை நோக்கி சென்றதை உறுதிப்படுத்தினோம்.

இதையடுத்து கார் திருடனைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து ஆல் இந்தியா அளவில் உள்ள போலீஸ் ஸ்பெஷல் டீமின் உதவியை நாடினோம். அப்போது திருடப்பட்ட இடத்தில் காரின் கண்ணாடி துகள்கள் கிடந்ததா என வடமாநிலத்தைச் சேர்ந்த ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எங்களிடம் கேட்டார். உடனே நாங்கள் எடுத்து வைத்திருந்த கண்ணாடி துகள்களின் போட்டோவை அந்த அதிகாரிக்கு அனுப்பி வைத்தோம். அதைப் பார்த்ததும் இந்த ஸ்டைலில் காரைத் திருடுவது ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல கார் திருடன் சத்யேந்திர சிங் ஷெகாவத் என அவர் உறுதிப்படுத்தினார். அதோடு அவரின் செல்போன் நம்பர், சத்யேந்திர சிங் ஷெகாவத் இதற்கு முன்பு திருடிய கார்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அந்த வடமாநில காவல்துறை அதிகாரி ஒருவர் எங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார். அதன்அடிப்படையில் எங்களின் விசாரணையைத் தொடங்கினோம். இந்த திருட்டு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மணலி பகுதியில் இன்னொரு பார்ச்சூனர் கார் திருடப்பட்ட தகவல் கிடைத்தது. அந்தக் காரின் அருகிலும் காரின் கண்ணாடி துகள்கள் கிடந்தன. அங்கு கிடைத்த சிசிடிவியில் சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதனால் அந்த வழக்கையும் சேர்த்து விசாரித்தபோது வடக்கு கடற்கரை பகுதியில் மற்றொரு பார்ச்சூனர் கார் இதே ஸ்டைலில் திருட்டுப் போனது.
40 நாள்களுக்குள் மூன்று சொகுசு கார்கள்
இதையடுத்து இன்னொரு கார் திருட்டு சென்னையில் நடப்பதற்குள் சத்யேந்திர சிங் ஷெகாவத்தைப் பிடித்துவிட வேண்டும் என நாலாபுறமும் அவரைத் தேடியபோதுதான் ராஜஸ்தானிலிருந்து விமானத்தில் சென்னைக்கு சத்யேந்திர சிங் ஷெகாவத் வந்த தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த துருப்பு சீட்டு மூலம் சத்யேந்திர சிங் ஷெகாவத் தற்போது எங்கு இருக்கிறார் என விசாரித்தபோது புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்று சத்யேந்திர சிங் ஷெகாவத்தை மடக்கிப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தோம்.
பின்னர் அவரிடம் விசாரித்தபோது என்னுடைய 19-வது வயதில் கார்களைத் திருட தொடங்கினேன். என்னுடைய 45 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றிருக்கிறேன். கடந்த 40 நாள்களுக்குள் சென்னையில் 3 சொகுசு கார்களைத் திருடி வடமாநிலத்துக்கு கொண்டு சென்று விற்றுவிட்டேன் என்று கூலாக கூறினான். உடனடியாக சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் குடும்பத்தினரிடம் அவர் கைது செய்யப்பட்ட தகவலைக் கூறினோம். அப்போது என்ன செக்ஷனில் (பிரிவில்) வழக்கு போட்டிருக்கிறீர்கள், எங்களுடைய வழக்கறிஞர் உங்களைத் தொடர்பு கொள்வார் என எதிர்முனையில் பெண் ஒருவர் பதிலளித்திருக்கிறார். (சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் மனைவி). இதையடுத்து சத்யேந்திர சிங் ஷெகாவத் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

நட்சத்திர ஹோட்டல்களில் அறை
சீனா கருவிகள்
தனிப்படை போலீஸாரிடம் பேசினோம்
`` சத்யேந்திர சிங் ஷெகாவத், சொகுசு கார்களை மட்டுமே திருடுவான். மார்க்கெட்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கார்கள் மட்டுமே இவனின் டார்க்கெட். இதற்காக எஸ்யூவி ரக சொகுசு கார்களின் சர்வீஸ் சென்டர்கள், ஹோரூம்களுக்கு செல்லும் சத்யேந்திர சிங் ஷெகாவத், அங்கு கார்களை வாங்குவதைப் போல நோட்டமிடுவான். சர்வீஸ் சென்டர்களுக்கு வரும் கார்கள், சாவியுடன்தான் நிறுத்தப்பட்டிருக்கும். அதனால் அந்தக் காரைத் திறந்து அதில் ஜிபிஎஸ் கருவியை பொருத்திவிடுவான். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் சத்யேந்திர சிங் ஷெகாவத், ஜிபிஎஸ் கருவி மூலம் அந்தக் காரை நோட்டமிடுவான். தற்போதுள்ள கார்களில் உள்ள சாப்ட்வேரை சத்யேந்திர சிங் ஷெகாவத் தொழில்நுட்ப உதவியுடன் ஹேக் செய்து அதை திருடுவான். பின்னர், காரின் கண்ணாடியை உடைத்து திருடிச் செல்வதைப் போல செட்டப் செய்யவே பழைய கார்களின் கண்ணாடி துகள்களை திருடும் இடத்தில் சிதறி விடுவான். காரின் கண்ணாடியை உடைத்து கார் திருடப்பட்டதாக போலீஸார் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்குள் காரின் பதிவு நம்பரை மாற்றிவிட்டு வடமாநிலத்துக்கு சென்றுவிடுவான் சத்யேந்திர சிங் ஷெகாவத்.
ஜிபிஎஸ் கருவியைப் போல செயல்படும் கருவி ஒன்றை சீனாவிலிருந்து வாங்கி வைத்திருக்கும் சத்யேந்திர சிங் ஷெகாவத், அதையும் கார் திருட்டுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறான். ஒரு சர்வீஸ் சென்டருக்குள் சத்யேந்திர சிங் ஷெகாவத் சென்றால் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களில் இந்தக் கருவியை பொருத்திவிட்டு வந்துவிடுவான். திறந்தவெளியில் நிறுத்தப்படும் கார்களை மட்டுமே இவன் திருடுவான். அதோடு சர்வீஸ் சென்டர்களுக்கு வரும் சொகுசு கார்களும் திறந்தவெளியில்தான் நிறுத்தப்பட்டிருக்கும். அதுவும் சத்யேந்திர சிங் ஷெகாவத்துக்கு வசதியாக இருந்திருக்கிறது.
விமானத்தில் பயணம்
பள்ளி படிப்பை முடித்த சத்யேந்திர சிங் ஷெகாவத், கார்களைத் திருடி அடிக்கடி சிறைக்குச் சென்று வந்திருக்கிறான். தொலை தூர கல்வி மூலம் எம்.பி.ஏ படித்த சத்யேந்திர சிங் ஷெகாவத், எப்போதும் டிப்டாப்பாக உடையணிவதை ஸ்டைலாக வைத்திருக்கிறான். ராஜஸ்தானிலிருந்து கார்களைத் திருட இவன் விமானத்தில்தான் வருவான். அதோடு நட்சத்திர ஹோட்டல்களில்தான் அறை எடுத்து தங்குவான். அதனால் இவன் மீது யாருக்கும் சந்தேகம் வராது. சரளமாக இந்தி பேசும் சத்யேந்திர சிங் ஷெகாவத்துக்கு தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளும் தெரியும். ஆனால் போலீஸிடம் சிக்கிக் கொண்டால் மொழி தெரியாது போல நடித்து தகவல்களை சொல்லமாட்டான். மகாராஷ்டிரா மாநில போலீஸாரால் சொகுசு கார் திருட்டில் கைதான சத்யேந்திர சிங் ஷெகாவத் சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான்.

திருடிய சொகுசு கார்களை நேபாளம், வடமாநிலங்களில் சொகுசு கார்களுக்கு போலியாக ஆவணங்களைத் தயார் செய்து நல்ல விலைக்கு விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வரும் சத்யேந்திர சிங் ஷெகாவத் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சத்யேந்திர சிங் ஷெகாவத் சென்னையில் கைதான தகவலைத் தெரிந்ததும் அவனை காவலில் எடுக்க ஆந்திர, கர்நாடக, மகராஷ்ட்ரா உள்ளிட்ட மாநில போலீஸார் எங்களைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். சென்னையில் திருடப்பட்ட மூன்று பார்ச்சூனர் கார்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.