மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர்த்தியின் மனைவி சரசு, சென்னை, ராஜமங்கலம் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை செய்து வந்தார். கடையில் வேலை அதிகமாக இருந்தால், தோழி வீட்டில் இரவில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 18.07.2025-ம் தேதி இரவு சரசுவை கணேசமூர்த்தி செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது சரசுவின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 21.07.2025-ம் தேதி கொளத்தூர், தனம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் அழுகிய நிலையில் சரசு சடலமாக கிடந்தார். இது குறித்து கொளத்தூர் போலீஸார் கணேசமூர்த்திக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சடலமாக கிடந்த சரசுவை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரசு, கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் போலீஸார், சரசுவை கொலை செய்தது யாரென்று விசாரித்தனர். மேலும் சரசு, சடலமாக கிடந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று இரவு சரசுவின் வீட்டிலிருந்து வடமாநில இளைஞர் ஒருவர் பதற்றத்துடன் வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர் .விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கொளத்தூர் போலீஸார் கூறுகையில்,``பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் சரசு கொலை செய்யப்பட்ட தகவல் உறுதியானதும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தோம். சிசிடிவியில் பதிவான வடமாநில இளைஞர் யாரென்று விசாரித்தபோது அவரின் பெயர் மோஷின் என்றும் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் மோஷினை தேடி வடமாநிலத்துக்குச் சென்றனர். அப்போது மோஷின் கான்பூர் பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று மோஷினை பிடித்தோம். பின்னர் கான்பூர் நீதிமன்றத்தில் மோஷினை ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு அழைத்து வந்தோம். அவரிடம் சரசுவை ஏன் கொலை செய்தாய் என்று விசாரித்தோம். அப்போது அவர், `நான் சென்னை அண்ணாநகர் பகுதியில் வேலை செய்தேன். அங்குதான் சரசுவை சந்தித்தேன். நாங்கள் இருவரும் நட்பாக பழகி வந்தோம். பின்னர் சரசும் நானும் காதலித்தோம். அதன்பிறகு இருவரும் கொளத்தூர் பகுதியில் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

எனக்கும் சரசுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதனால் இருவரும் சேர்ந்தே மது அருந்தி சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். சரசு, தனக்கு திருமணமாகவில்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சரசுக்கு அடிக்கடி நள்ளிரவில் போன் அழைப்பு வரும். அதில் பேசும் ஆண்கள், சரசுவிடம் தவறாக பேசுவார்கள். அதை நான் கண்டித்தேன். இந்தச் சூழலில்தான் சம்பவத்தன்று நானும் சரசும் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது சரசுவுக்கு போன் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவருடன் சரசு சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனக்கு ஆத்திரம் வந்தது. உடனடியாக சரசுவின் வயிற்றில் ஓங்கி மிதித்தேன். பின்னர் காலால் அவரை உதைத்தேன். இதில் கீழே விழுந்த சரசு, உயிரிழந்துவிட்டார். அதனால் அவர் அணிந்திருந்த நகை, செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு அண்ணாநகருக்கு சென்றுவிட்டேன். பின்னர் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து ரயிலில் கான்பூருக்குச் சென்றேன். சரசுவின் கணவரை தன்னுடைய அண்ணன் என்று கூறி என்னை ஏமாற்றிவிட்டார்' என்று தெரிவித்தார். இதையடுத்து மோஷினை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சரசு, பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். இவரின் கணவர் கணேசமூர்த்தி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். டிரைவரான கணேசமூர்த்தி, விருத்தாசலத்தைச் சேர்ந்த சரசுவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்தநிலையில்தான் சரசு, சென்னையில் வேலை செய்வதாக கணவரிடம் கூறிவிட்டு வடமாநில இளைஞருடன் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சரசு கொலை செய்யப்பட்ட பிறகே முழு விவரம் வெளியில் தெரியவந்திருக்கிறது" என்றார்