கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரின் தாக்குதலினால் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் இவ்வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் கடந்த 2020 ஆகஸ்டில் உயிரிழந்தார். மீதி 9 பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் பலமுறை ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தும் உயர் நீதிமன்றம் வழங்கவில்லை.
இந்த நிலையில் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில், "குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசு மற்றும் காவல்துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்ரூவராக மாற விரும்புகிறேன். சம்பவத்தின்போது மற்ற போலீசார் செய்தது குறித்து உண்மையை கூற விரும்புகிறேன். தந்தை மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் அரசு சாட்சியாக மற விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீதர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில், "இந்த வழக்கில் முதலாவது எதிரியாக ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளது. தனது தரப்பு குற்றத்தை மறைக்க மற்ற எதிரிகள் மீது ஸ்ரீதர் குற்றம் சாட்டுகிறார், இந்த மனு ஏற்படையதல்ல" என்று எதிர்த்து வாதிடப்பட்டது.
ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.