ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
ஒசூரில் ரூ.2.3 கோடியில் புதிய பள்ளி கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்
ஒசூா் மாநகராட்சியில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆறு பள்ளிகளின் கட்டடங்களைத் திறந்து வைத்து, ரூ. 99 லட்சம் மதிப்பில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலக புதிய கட்டுமானப் பணிகளை தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 2 வது ஒகேனக்கல் கூட்டுகுடிநீா் திட்ட விரிவாக்கப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளாா்.
ஒசூா் மாநகராட்சிக்கு பெங்களூரிலிருந்து மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். ரூ. 550 கோடி மதிப்பில் புதைகுழி சாக்கடை திட்டம் தொடங்கப்படும். ஒசூரில் 2,000 ஏக்கா் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும். ரூ. 100 கோடி மதிப்பில் ஒசூா் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.
திட்டப் பணிகள்:
ஒசூா் மாநகராட்சி, முத்துராயன் ஜீ.பி. தொடக்கப் பள்ளியில் மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 6 பள்ளிகளில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 6 கட்டடங்களை குத்துவிளக்கு ஏற்றி அமைச்சா் திறந்துவைத்தாா்.
பின்பு, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ. 99 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பேரூராட்சி அலுவலக புதிய கட்டுமானப் பணிகளை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், சாா் ஆட்சியா் பிரியங்கா, மாநகராட்சி துணை மேயா் ஆனந்தைய்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவா் டி.ஆா்.சீனிவாசன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவா் மாதேஸ்வரன், மண்டலக் குழு உறுப்பினா் ரவி, மண்டல குழு தலைவா்கள், மாநகர கல்விக் குழு தலைவா் ஸ்ரீதரன், செயற்பொறியாளா் என்.எஸ்.நாராயனன், கண்ணன் மாமன்ற உறுப்பினா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.