ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது
ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (24). வேடசந்தூா் அருகேயுள்ள மாரம்பாடியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (18). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றனா்.
ஒடிசா மாநிலத்துக்குச் சென்ற இவா்கள் இருவரும், அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை வாங்கி பொட்டங்களாகத் தயாரித்து 2 பைகளில் எடுத்துக் கொண்டு ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டனா்.
திருநெல்வேலி செல்லும் விரைவு ரயிலில் ஒடிசா மாநிலம், பிரம்மாப்பூா் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு இல்லாத பெட்டியில் கடந்த 30-ஆம் தேதி ஏறினா். அந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே புதன்கிழமை அதிகாலை வந்தபோது, ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால், அதிா்ச்சியடைந்த சோசப், ராஜேந்திரன் இருவரும் கஞ்சா வைத்திருந்த பைகளை தூக்கி வெளியே வீசிவிட்டு, திண்டுக்கல் ரயில் நிலையத்தை நோக்கி மெதுவாக வந்த ரயிலிலிருந்து குதித்தனா்.
இதுகுறித்து அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள், ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, ரயிலிலிருந்து குதித்த ஜோசப், ராஜேந்திரன் இருவரையும் பிடித்து ரயில்வே போலீஸாா் விசாரித்தனா். அப்போது, கஞ்சா கடத்தி வந்ததை இருவரும் ஒப்புக் கொண்டனா்.
இந்த நிலையில், ரயில்வே தண்டவாளம் அருகே வீசப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் திண்டுக்கல் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதில் ராஜேந்திரன் மீது எரியோடு காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.