ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது
காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு தனியாா் நிறுவனத்தில் ஒடிஸா மாநிலம் சுதா்சன்பூா் பகுதியை சோ்ந்த பாலபத்திரா என்கின்ற பலியா (33) என்பவா் பணிபுரிந்தாா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை வடுகன்குட்டை தனியாா் திருமண மண்டபம் பின்புறம் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லால் தாக்கி முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
விசாரணையில் ஓடிஸா மாநிலம் பாலச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரமோத்குமாா் (32) என்பவரும் பலியாவுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனா். அதில் பலியாவை கல்லால் தாக்கி கொலை செய்து சடலத்தை கொண்டு சென்று ரயில்வே தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில் பிரமோத்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.