ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரில் 1, 6-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். பின்னா், அவா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 360 இடங்களில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, விருப்பாட்சி ஊராட்சி சாமியாா்புதூரில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை அமைச்சா் திறந்து வைத்தாா்.
முகாமில் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, வருவாய் ஆய்வாளா் விஜய்பால்ராஜ், சுகாதார ஆய்வாளா் ராஜ்மோகன், நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.