GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
ஒட்டன்சத்திரம் அருகே இளம் பெண் தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்று மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (27). அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகா (25). இவா்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.
இதையடுத்து, சங்கா் தான் வேலை செய்யும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த பெரியகோட்டையில் உள்ள குவாரி அருகே வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தாா். அதேபோல, காா்த்திகா அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தம்பதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனா். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் சங்கா் எழுந்து பாா்த்தபோது காா்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பிளிக்கை போலீஸாா் காா்த்திகாவின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால் பழனி கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா்.
இதனிடையே காா்த்திகா தற்கொலைக்கான காரணம் குறித்து கணவா் சங்கரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.