ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்: அமைச்சா் அர. சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடை மேம்பாலம் கட்டப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி கீரனூரில் ரூ.57.04 கோடியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகளும், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் ரூ.66.23 கோடியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்ட சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்வில், உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: ஒட்டன்சத்திரம், கீரனூா் பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வீட்டின் உரிமையாளா்களிடம் சாவி ஒப்படைக்கப்படும். ரூ.33 கோடி செலவில் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தாா்ச் சாலை அமைக்கப்படும்.
குப்பை இல்லாத நகராட்சியாக 12 நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியும் ஒன்று. இதற்காக 20 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டு தினந்தோறும் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல, ரூ.25 கோடியில் 5 மாடிகளுடன் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வுகளில், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம், மாவட்ட திட்ட இயக்குநா் பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் ஸ்வேதா, கீரனூா் பேரூராட்சித் தலைவா் க. கருப்புச்சாமி, துணைத் தலைவா் அ.யு. அப்துல் சுக்கூா், செயல் அலுவலா் கா. ரோகிணி, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணியபிரபு, தலைமை செயற்குழு உறுப்பினா் வீ. கண்ணன், திமுக மத்திய ஒன்றியச் செயலா் பொன்ராஜ், மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.