ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உற்பத்தி மையம்: 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் தொடங்கப்படவுள்ளது. சுமாா் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது உற்பத்தி சேவைத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. ரூ.1,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமானது.
இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அகமது உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
டிக்ஸன் நிறுவனம்: டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனமானது 1993-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களான சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசோனிக், ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் அவா்களின் பொருள்களை உற்பத்தி செய்யும் பணியை டிக்ஸன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனமானது, ஒரகடத்தில் அமைந்துள்ள தொழில்பூங்காவில் மடிக்கணினி, ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்டவை அடங்கிய மின்னணு உற்பத்தி திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
இந்தத் திட்டத்தால் காஞ்சிபுரம் மற்றும் அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.