ஒரே ஆண்டில் ரூ. 1300 கோடி முதலீடு.... அசத்தும் சன் பிக்சர்ஸ்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது.
பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் பான் இந்திய கலாசாரத்தை விரிவுபடுத்தியதுடன் அதன் வணிக வெற்றியைக் காட்டி பல மொழிகளிலிருந்தும் அதிக பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையை விதைத்தது.
இதனால், கன்னடத்தின் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் கேஜிஎஃப் , கேஜிஎஃப் - 2 படங்களைத் தயாரித்ததுடன் ரூ. 1500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றனர்.
பின், ஆந்திரத்தைச் சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புஷ்பா - 1 மற்றும் புஷ்பா - 2 ஆகிய படங்களில் பட்ஜெட்டை வாரி இறைத்து ரூ. 2400 கோடிக்கும் அதிகமான வணிகத்தைச் செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்தனர்.
அந்தப் பட்டியலில் தற்போது தமிழிலிருந்து கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படம் ரூ. 400 கோடியிலும், ரஜினி - நெல்சன் இணையும் ஜெயிலர் - 2 படத்தை ரூ. 300 கோடியிலும், இந்தியாவே எதிர்பார்க்கும் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தை ரூ. 600 கோடியிலும் தயாரிக்க ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 1300 கோடி வரை சினிமா தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் முதலீடு செய்துள்ளது.

இவற்றில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களை ஒரு தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பான் இந்திய சினிமாக்கள் என்பதால் இதன் வணிகங்கள் பெரிதாக நடக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் - 1, ராயன் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சினிமாவில் பான் இந்தியா கலாசாரம் அசிங்கமானது: செல்வராகவன்