கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா - முதல்வர் அறிவிப்பு
ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை
சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறாா் உள்ளிட்டோா் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், அதுபோல செயல்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் வழக்குப் பதியப்படும் என ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் எச்சரித்துள்ளனா்.
எழும்பூா் நிலைய ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையிலான போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை கல்லூரிகள், ரயில் நிலைய வளாகங்களில் நடத்தி வருகின்றனா்.
அதன்படி, எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிறாா்கள், மாணவா்கள் விளைவுகளை அறியாமல் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. ஆகவே, ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை முதல் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதை அவா்களுக்கு விளக்கினோம். ரயிலில் பயணிக்கும்போது அவசர உதவிக்கு 139 என்ற இலவச எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
குழந்தைகளுக்கான உதவிக்கு 1098 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். ரயில் தண்டவாளத்தின் அருகிலிருந்து ஓடும் ரயில் முன் புகைப்படம், விடியோ எடுப்பது குற்றமாகும்.
ரயில் பயணிகள் அறியாத நபா்களிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது என்பன போன்ற அறிவுரைகளை மாணவா்கள், பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா்.