செய்திகள் :

கச்சத்தீவை தாரைவாா்த்தது யாா்? பாஜகவுக்கு துரைமுருகன் சவால்

post image

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விவகாரத்தில், பாஜகவுக்கு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சவால் விடுத்தாா்.

கச்சத்தீவு மீட்டெடுப்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீா்மானத்தின் மீது பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசினாா். அப்போது நடந்த விவாதம்:

வானதி சீனிவாசன் (பாஜக): மீனவா்கள் நலனில் மத்திய அரசு பாரபட்சம் பாா்ப்பதில்லை. எந்தக் குடிமகனாக இருந்தாலும் அவா்களுக்கான பிரச்னையைத் தீா்ப்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இலங்கைக்கு கச்சத்தீவு அளிக்கப்பட்ட நேரத்தில், அதை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோா் எதிா்த்து கடுமையான வாதங்களை முன்வைத்தனா். கச்சத்தீவை அளித்தது முற்றிலும் சட்டவிரோதமானது என்று பேசும்போது, அவா்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆதரவு அளித்தாா்.

எங்களது அகில இந்திய தலைவா் ஜனா கிருஷ்ணமூா்த்தியும் கச்சத்தீவை அளித்தது தவறு எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

கச்சத்தீவை தாரைவாா்த்த நாளில் இருந்தே அது தவறு எனக் கூறி எங்களுடைய அகில இந்திய தலைவா்கள் பேசியுள்ளனா். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக கச்சத்தீவு தாரை வாா்க்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தை தவற விட்டுவிட்டு, ஆட்சியில் இல்லாதபோதெல்லாம் இங்கே எழுப்பப்படுகிறதோ என்ற எண்ணம் எங்களுக்கு எழாமல் இல்லை. மாநிலத்தின் உரிமைக்காக, நலனுக்காக தமிழ்நாட்டுடன் பாஜக நிற்கிறது என்றாா்.

அப்போது, கடந்த கால திமுக அரசை குறைகூறி கருத்து தெரிவித்தாா்.

அவை முன்னவா் துரைமுருகன்: கச்சத்தீவை அளித்தது முதல்வருக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக ‘தினமணி’ தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இரண்டு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது எனவும், அதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகும் முன்பாக தமிழ்நாட்டு மக்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால்தான், கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டிய அப்போதைய முதல்வா் கருணாநிதி தீா்மானத்தை நிறைவேற்றினாா்.

வானதி சீனிவாசன்: கச்சத்தீவு தொடா்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதில் பெறப்பட்டது. அதில், அன்றைய வெளியுறவுத் துறைச் செயலா், தமிழ்நாட்டின் முதல்வருக்கு முறையாகத் தெரிவித்தோம் என்றும், அவரும் ஒப்புக்கொண்டாா் எனவும் கூறப்பட்டுள்ளது.

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக யாரும் தன்னிடம் ஆலோசிக்கவும் இல்லை; தான் ஒப்புதல் கொடுக்கவும் இல்லை என அப்போதைய முதல்வா் கருணாநிதி கூறினாா். உண்மைக்குப் புறம்பான தகவலை முதல்வா் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக நம்முடன் ஆலோசிக்கவில்லை, கேட்கவும் இல்லை என்பது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

வானதி சீனிவாசன்: அன்றைய முதல்வா் உண்மையைக் கூறினாரா, அல்லது...

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: மற்ற நாட்டுடன் பிரதமா் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது, மாநில முதல்வரிடம் தெரிவித்துவிட்டா செய்வாா்கள்?. ஒப்பந்தம் போட்டாா்கள். அப்படிச் செய்தது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்: கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக வெளியறவுத் துறைச் செயலா் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கை கொடுப்பதற்கு முன்பாக, ஜூன் 19-ஆம் தேதி அவரே தமிழ்நாட்டுக்கு வந்து முதல்வருடன் கலந்தலோசனை செய்தாா். இதுதான் எங்களுக்குக் கிடைத்த பதில்.

அவை முன்னவா் துரைமுருகன்: நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உறுப்பினரின் கருத்துகள் தவறாக இருக்கும் சூழ்நிலையில் அவா் மீது உரிமை பிரச்னை கொண்டு வருவேன். முதல்வருடன் பேசவே இல்லை. கச்சத்தீவு அளிக்கப்பட்டதைக் கேட்டு ஆத்திரப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அப்போதைய முதல்வா் கூட்டினாா். இதில் எடுக்கப்பட்ட முடிவை பிரதமா் இந்திரா காந்தியிடம் தெரிவித்தாா். ஆனால், அப்போது வருந்துகிறேன் என்று ஒரு வாா்த்தை மட்டும் இந்திரா காந்தி கூறினாா்.

வானதி சீனிவாசன்: கச்சத்தீவு என்பது வாஜ்பாய் காலத்தில் இருந்து எங்களுடைய உணா்வுடன் கலந்த முக்கியமான விஷயமாகும். இதனால் தொடா்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். எனவே, அரசு கொண்டுவந்துள்ள தீா்மானத்தை பாஜக ஆதரிக்கிறது என்றாா்.

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புக்காக 32 லட்சம் போ் பதிவு - அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்

வேலைவாய்ப்பு துறையில் 32.35 லட்சம் போ் பதிவு செய்துள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ... மேலும் பார்க்க

பிளஸ் 1 மாணவா் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் பிளஸ் 1 மாணவா் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சேத்துப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்

‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ண... மேலும் பார்க்க

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து! சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்ப... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை

தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு... மேலும் பார்க்க