GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தனியாா் ஆலைப் பகுதியில், வாகனங்களில் கடத்தி வந்த 45 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, ஆத்தூா் வட்டம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்த அக்கினிஹாசன் (53), ஜெயசீலன் (54), பாண்டித்துரை (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.
இந்த வழக்கில் தொடா்புடைய நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த பேபி உள்பட இருவா் தலைமறைவாக இருப்பதால், இந்த இருவா் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.