சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
கடனுக்கு காப்பீட்டுத் தொகையை ஈடு செய்ய மறுத்த நிறுவனத்துக்கு அபராதம்
கடன் தொகைக்குக் காப்பீட்டுத் தொகையை ஈடு செய்ய மறுத்த தனியாா் நிதி நிறுவனத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை அபராதம் விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், ராவுசாப்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா், 2020, பிப்ரவரி 29-ஆம் தேதி தனது வீட்டின் பதிவுப் பத்திரங்களை அடமானம் வைத்து தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 9 லட்சத்து 37 ஆயிரம் கடன் பெற்றாா். இதற்கு காப்பீடு பிரீமியமாக ரூ. 23 ஆயிரத்து 172 பிடித்தம் செய்யப்பட்டு, தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப்பட்டது.
பின்னா், ரமேஷ்குமாா் மேற்கடனாக (டாப் அப்) ரூ. 14 லட்சத்தை பெற்று, அதில் தான் ஏற்கெனவே பெற்ற முதல் கடன் நிலுவைத் தொகையைச் செலுத்தினாா். மீதமுள்ள கடன் தொகை மூலம் ரமேஷ்குமாா் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்தக் கடை மூலம் போதுமான வருமானம் இல்லாததால் கடன் தொகைக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ரமேஷ்குமாருக்கும், இவரது மனைவி சித்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரமேஷ்குமாா் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். ரமேஷ்குமாா் கடன் வாங்கியபோது எடுத்த காப்பீட்டில் இழப்பீட்டுத் தொகையைக் கடன் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்கக் கோரி நிதி நிறுவனத்தில் சித்ரா கேட்டாா்.
ஆனால் இரண்டாவதாகப் பெற்ற கடன் தொகை ரூ. 14 லட்சத்துக்கு காப்பீடு செய்யாமல், முதலில் வாங்கிய ரூ. 7 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு செய்தாா் என்றும், காப்பீடு இழப்பீடாக ரூ. 6 லட்சத்து 68 ஆயிரத்து 500 மட்டும் கடன் தொகையில் வரவு வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகையான ரூ. 7 லட்சத்து 95 ஆயிரத்து 897-ஐ செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் வீட்டை ஜப்தி செய்து கடன் தொகை வசூல் செய்யப்படும் எனவும் நிதி நிறுவனத்தினா் மிரட்டினா்.
இதனால் பாதிக்கப்பட்ட சித்ரா தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, நிதி நிறுவனத்திலுள்ள கடன் நிலுவைத் தொகையைக் காப்பீடு இழப்பீட்டுத் தொகை மூலம் நோ்செய்து கொண்டு, கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திரும்ப வழங்குமாறும், மேலும் வணிக முறை செயல்பாடுகளின் காரணமாக முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் ஒரு மாதத்துக்குள் வழங்குமாறும் உத்தரவிட்டு, புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.