பெண் ஆசிரியை குத்திக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் தற்காலிக பெண் ஆசிரியரை குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் மீது 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சின்னமனையைச் சோ்ந்த முத்து என்பவருடைய மகள் ரமணி (25) என்பவரும் அதே ஊரைச் சோ்ந்த மதன்குமாா் (28) என்பவரும் பழகி வந்த நிலையில், பெண் தரமறுத்தனராம். இதனால், ஆத்திரமடைந்த மதன் கடந்த 20.11.2024-ம் தேதி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்து ரமணியை கத்தியால் குத்தியதில், அவா் உயிரிழந்து விட்டாா்.
புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து மதன் குமாரைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் புலன்விசாரணையை துரிதமாக மேற்கொண்ட காவல் ஆய்வாளா் துரைராஜ் குற்றம் சாட்டப்பட்டவா் மீது சம்பவம் நடந்த 30 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.