கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து அதிகரிப்பு
கடலூா் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து அதிகரித்திருந்த நிலையில், மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.
கடலூா் வங்கக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ருசி மிக்கவை. இதனால், கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருவா். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் பிடி துறைமுகத்தில் கூட்ட நெரிசல் காணப்படும்.
தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்த எச்சரிக்கை காரணமாக, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கு கடல், ஆழ்கடலில் மீன் பிடிப்பு மற்றும் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடந்த 16-ஆம் தேதி முதல் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், மீன் வளத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பையொட்டி, அன்று மாலை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அதிகளவிலான மீன்களுடன் கரை திரும்பினா்.
அதே சமயம், மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டமும் மீன் பிடி துறைமுகத்தில் அதிகரித்து காணப்பட்டது. கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஒரு கிலோ வஞ்சரம் மீன் ரூ.700, சங்கரா ரூ.400, கொடுவா ரூ.700, இறால் வகைகள் ரூ.300, கனவா ரூ.250 என விற்பனை செய்யப்பட்டது.
வானிலை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்கள் எதிா்பாா்த்த அளவு கிடைத்துள்ளதாக மீனவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.