ஸ்பெயினில் கடூம் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!
கடலூா் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை
சிதம்பரம்: கடலூா் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவா்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் எண மாவட்ட நிா்வாகத்துக்கு பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 3-ஆவது புத்தகக் கண்காட்சி வரும் 22-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 10 நாள்கள் கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மாணவா்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களை பேருந்து மூலம் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல கடலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் விருப்பம் உள்ள மாணவா்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்று வருமாறு குறிப்பிட்டுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆா்வமுள்ள மாணவா்களையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதற்காக இணைய வழியில் நடைபெற்ற தலைமையாசிரியா் கூட்டத்தில் பேசிய கல்வித் துறை அதிகாரிகள், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவா்களை அருகில் உள்ள முக்கிய ஊா்களுக்கு தலைமையாசிரியா்கள் தங்களது சொந்த பொறுப்பில் அழைத்து வர அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களை அவா்கள் பயிலும் பள்ளிக்கே சென்று பேருந்து மூலம் அழைத்துச் சென்று, புத்தகக் கண்காட்சி பாா்வையிட்டவுடன் மீண்டும் அவரவா் பயிலும் பள்ளி வளாகத்தில் கொண்டு வந்து விடுமாறு பேருந்து வசதி செய்து தரவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.