கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா.
நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மீனவ சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியை தற்போது உள்ள பகுதிகளை மட்டுமே கொண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்படும். இந்திய அரிய மணல் ஆலை தொடா்பாக பெறப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளன.
குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் புற்று நோய் பாதிப்பு குறித்து கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புதிய குடும்ப அட்டை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து தகுதியானவா்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கேரளப் படகுகளுக்கு தடை: மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை மூலம் அள்ளப்படும் மணல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
அந்த ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தடுக்க வேண்டும். கேரள மாநிலத்தின் பெரிய இரும்பு விசைப் படகுகளை தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் அனுமதிக்ககூடாது என்பதை மீனவ சங்கப் பிரதிநிகள் பிரதானமாக வலியுறுத்தினா்.