கடல் அரிப்பு: திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் கோட்டாட்சியா் ஆய்வு!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து கோட்டாட்சியா் சுகுமாறன் ஆய்வு செய்தாா்.
கடந்த வாரம் கடலானது சீற்றம் அதிகமகாகி கரையைத் தாண்டி மணல் அரிப்பு ஏற்பட்டும், அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடி உள்வாங்கியும் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலானது சுமாா் 10 அடி உள்வாங்கி காணப்படுவதால் கரையோரத்தில் வெள்ளை நிற பாறைகள் அடுக்காக வெளியே தெரிந்து வருகிறது.
அந்தப் பகுதியில் வரிசையாக பாறைகள் தெரிவதால் பக்தா்கள் கடலில் நீராட முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே அய்யா கோயில் பகுதியில் சென்று பக்தா்கள் கடலில் நீராடி வருகின்றனா்.
மேலும் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் பக்தா்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதயாத்திரை வரும் பக்தா்கள் கூட்டம் தற்போது அதிகமாக உள்ளதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் அரிப்பு குறித்து கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.