கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு
கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் மே 19-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
வழக்குரைஞா் ஹரிசங்கா் பாண்டே என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, போஸ்டனில் உள்ள புரெளன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உரையாற்றினாா். அப்போது, கடவுள் ராமரும், அவரின் சகாப்தத்திலிருந்து வெளிவந்த கதைகளும் கற்பனையான புராண கதைகளாகும் என்று குறிப்பிட்டுள்ளாா். இது சனாதனவாதிகளின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆற்றப்பட்ட வெறுப்புப் பேச்சாகும். எனவே, உரிய பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிமன்ற கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீரஜ் குமாா் திரிபாதி, மனு வரும் 19-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டதோடு, இதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றாா்.