கடின உழைப்புக்கு பலன்: தேவ்தத் படிக்கல்
ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ஆர்சிபி அசத்தியது.
இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார் தேவ்தத் படிக்கல். ஸ்டிரைக் ரேட் 168.18ஆக இருந்தது.
தேவ்தத் படிக்கல் 2024இல் லக்னௌ அணிக்காக 7 இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
ஐபிஎல் 2025க்கான ஏலத்தில் கடைசி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். இது குறித்து போட்டிக்குப் பிறகு தேவ்தத் படிக்கல் கூறியதாவது:
கடின உழைப்புக்கு பலன்
முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. தற்போது, 3-4 ஆண்டுகளில் என்னுடைய தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளேன். இது எளிதான விஷயமில்லை. நீங்கள் சில நேரங்களில் எவ்வளவு முயற்சித்தாலும் அது நிகழ்வதில்லை.
இந்த சீசனில் பேட்டிங்கில் கடினமாக உழைத்துள்ளேன். கடந்த ஆண்டு நினைத்த அளவுக்கு விளையாடவில்லை. என்னை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதை நான் அறிவேன்.
இந்த ஐபிஎல் போட்டிகள் தொடர்வதற்கு முன்பாக என்னுடைய கடின உழைப்பு தற்போது பலனை அளித்துள்ளது.
எங்கு விளையாடினாலும் வெல்லுவோம்
அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமானது. எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள், எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. அப்படித்தான் நாங்கள் சிஎஸ்கே, மும்பை, கேகேஆர் உடனும் விளையாடினோம்.
நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் அந்த நேரத்தில் அதை வெல்ல நினைக்கிறோம். அவ்வளவுதான். ஏனெனில் எந்தத் தருணம் நம்மை தொடரில் கொண்டு செல்லும் என்பது தெரியாது.
நாங்கள் எங்கு சென்றாலும் வெல்ல வேண்டுமென நினைக்கிறோம் என்றார்.