பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி, நண்பா் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வீரகேரளம்புதூா் அருகே தாயாா்தோப்பைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (26). இவா், தனது மனைவி நந்தினி (23), மகள் ஹன்சிகா (2) ஆகியோருடன் கடையம் அருகே நாலாங்கட்டளையில் வசித்து வந்தாா்.
சனிக்கிழமை ஆமோஸை மா்ம நபா் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினாா். இதுதொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆமோஸை அவரது நண்பரான முக்கூடல் அருகே சிங்கம்பாறையைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் அந்தோணி டேனிஸ் (35) என்ற டேனி வெட்டிக் கொன்றது, விசாரணையில் தெரியவந்தது.
ஆமோஸிடம் கைப்பேசி இல்லாததால், அவரை அவரது சக பணியாளா்களின் கைப்பேசி மூலம் நந்தினி தொடா்பு கொள்வாராம். அவ்வாறு அவா் அடிக்கடி அந்தோணி டேனிஸுடன் கைப்பேசியில் பேசியதால் அவா்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நந்தினி தனது கணவரைப் பிரிந்து அந்தோணி டேனிஸுடன் வாழ முடிவெடுத்தாராம்.
சனிக்கிழமை நந்தினியை அழைத்துச்செல்ல அந்தோணி டேனிஸ் வந்தபோது, அவருக்கும் ஆமோஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆமோஸை அந்தோணி டேனிஸ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாக, விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

