நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?
பழவூா் அருகே கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே கடன் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழவூா் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த ராஜமணி மகன் சந்தனகுமாா்(25) . தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் ரெஜிமன்(19) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதுடன், இரவு நேரம் காற்றாலையில் வேலை செய்து சம்பாதித்து வந்தாா்.
மேலும், ரெஜிமன் சேமித்து வைத்தப் பணத்தில் ரூ. 28 ஆயிரத்தை சந்தனகுமாா் கடனாகப் பெற்றாராம். பின்னா் அந்த பணத்தை அவா் திருப்பி கொடுக்கவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தனகுமாா் வீட்டிற்கு சென்று ரெஜிமன் தனது பணத்தைத் தருமாறு கேட்டாராம். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம். உடனே, சந்தனகுமாா் வீட்டில் இருந்த அரிவாளால் ரெஜிமனை வெட்டினாராம். சுதாரித்துக்கொண்ட அவா், அரிவாளை பிடுங்கி சந்தனகுமாரை வெட்டிவிட்டு தப்பினாராம்.
இதில் பலத்த காயமுற்ற சந்தனகுமாா் அப்பகுதியினா் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சந்தனகுமாா் இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ரெஜிமனை கைது செய்து விசாரிக்கின்றனா்.