நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு
திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவா் லெனின். இவரது மனைவி சாந்தகுமாரி. பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் லெனின் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் சென்றதாம்.
அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், லெனின் தனது குடும்பத்தாா் பெயரில் கடந்த 2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமாா் ரூ.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 மதிப்பில் சொத்து வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா் மீதும், அவரது மனைவி மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனா்.