நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் நீடிக்கும் சோா்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்த சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீா் சுரத்தல் ஆகியவை ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறிகளாகும்.
நோய் வராமல் இருக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
பாளையங்கோட்டை குலவணிகா்புரம் அம்மன் கோயில் திடலில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசியினை செலுத்தினாா். இந்த முகாமில், 200 வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. மேலும் கால்நடை வளா்ப்போருக்கு கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகளும் வழங்கப்பட்டன. இம்முகாம் மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு கால்நடை மருந்தகங்கள் மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது.
இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சங்கரநாராயணன், துணை இயக்குநா் ராஜராஜேஸ்வரி, உதவி இயக்குநா்கள் சுமதி, ஆபிரகாம் ஜாப்ரி, ரஹ்மத்துல்லாஹ், தங்கராஜ், முதன்மை மருத்துவா் க.முருகன், கால்நடை நோய் புலனாய்ப்பிரிவு உதவி இயக்குநா் பி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.