கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு
புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணை அமைப்பை நிறுவி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கணக்கில் வராமல் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், யஷ்வந்த் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவில், அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 11 ஆண்டுகளாக களங்கமற்ற வாழ்வை மேற்கொண்டதாகவும், விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள், தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கவில்லை என்றும், அதனால், அவர்களது அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.
இதைத்தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா்.
இதனால், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகளைத் தொடங்குமாறு, தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதன் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதான் நடைமுறை!
ஒரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான 1968-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவைகளிலும் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த பதவிநீக்கத் தீா்மானத்தில் குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 பேரும், மக்களவை உறுப்பினா்கள் 100 பேரும் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும்.