செய்திகள் :

கண்ணியமற்ற `நாடு கடத்தல்’ - தென் அமெரிக்க நாடுகளிடம் இந்தியாவுக்கான பாடம் என்ன?

post image

நாடு கடத்தல்

டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 205 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அண்மையில் ராணுவ விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியர்களை கொதிப்படையச் செய்தது. எந்தவித முறையான இருக்கை வசதியும் இல்லாத சி-17 ரக ராணுவ விமானத்தில் கை,கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்கள் உட்காரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதில் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். அந்த வீடியோவுடன் ‘சட்டவிரோதமாக நுழைந்தால் இங்கிருந்து அகற்றப்படுவீர்கள்’ என்ற எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதில் இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைக் காத்திடவும் இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

நாடாளுமன்றம் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்துக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஒரு நல்ல வாழ்க்கையை தேடி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, பெரிய கனவுகளுடன் செல்லும் மக்களை இப்படி கண்ணியக்குறைவாக நடத்துவதா என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதில் பலரும் முன்வைக்கும் விமர்சனம் இந்திய அரசின் மீதுதான் இருந்தது.

தனது நாட்டு குடிமக்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதை மத்திய அரசு கடுமையாக கண்டித்திருக்க வேண்டாமா? பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிடம் காட்டும் கடும் தொனி அமெரிக்கா என்று வரும்போது எங்கே போனது என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவது என்பது இன்று தொடங்கிய ஒன்றல்ல. கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு கூட, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். ஆனால் ட்ரம்ப், இதனை மிகவும் பெரிய அளவிலும், வெளிப்படையாகவும் செய்வதன் மூலம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உலக அரங்கில் மிக அழுத்தமாக நிறுவ விரும்புகிறார்.

சட்டவிரோத குடியேற்றம் அல்லது சட்டப்பூர்வ என்பதை ஒரு பக்கம் வைத்துவிடலாம். இப்படி நாடு கடத்தப்படுபவர்கள் அனைவருமே இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட கோடிகளை நெருங்கும் தொகைகளை செலவழித்து சென்றவர்கள். அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெனிசுலா, கொலம்பியா போன்ற தென் அமெரிக்க நாடுகளிடமிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாடுகள் எடுத்த நடவடிக்கையை போல இந்தியா எடுக்க தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

வெனிசுலா, கொலம்பியா

வெனிசுலாவை பொறுத்தவரை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த தனது 200 குடிமக்களை மீட்க இரண்டு விமானங்களை அனுப்பி வைத்தது. அமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் தனது குடிமக்களை திரும்ப ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது மட்டுமின்றி, விமானங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

“வெனிசுலா குடிமக்களின் எந்தவொரு இடமாற்றமும் அவர்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைக்கு முழுமையான மரியாதையுடன் செய்யப்பட வேண்டும்” என்பதை வெனிசுலா வெளியுறவுத் துறை உறுதிபட தெரிவித்துள்ளது.

வெனிசுலா

இன்னொரு புறம் மற்றொரு தென் அமெரிக்க நாடான கொலம்பியா, கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் தனது குடிமக்களை சுமந்து வந்த அமெரிக்க ராணுவ விமானத்தை திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ “கொலம்பிய குடிமக்களை அமெரிக்கா குற்றவாளிகளை போல நடத்த முடியாது. அவர்களை ஏற்றி வரும் அமெரிக்க விமானங்கள் எங்கள் எல்லைக்குள் நுழைவதை நான் தடை செய்கிறேன்.. அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதி செய்தற்கான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டால் மட்டுமே அந்த விமானங்கள் அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல அமெரிக்காவிலிருந்து பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு குடிமக்கள் கைவிலங்குடன் இருப்பதை கண்ட பிரேசில் நீதித் துறை அமைச்சர் ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி, அமெரிக்காவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். கைவிலங்குகளை உடனடியாக அகற்றச் செய்த அவர், “இது மனித உரிமைகளை வெளிப்படையாக புறக்கணிக்கும் செயல்’ என்று சாடினார்.

88 பிரேசில் குடிமக்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பெலோ ஹரிஸான்டே நகரத்தில் தரையிறங்குவதற்கு பதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மனாஸ் நகரத்தில் தரையிறங்கியது. பிரேசில் போலீஸாரின் தலையீட்டால் விமானத்தில் இருந்தவர்களின் கைவிலங்குகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் அங்கிருந்து பிரேசில் குடிமக்களை ‘கண்ணியத்துடன்’ பிரேசில் விமானப் படை விமானங்களின் மூலம் அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் பிரேசில் அதிபர் லுலா.

தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் எதிர்வினை இப்படியென்றால், நாடாளுமன்ற அமளியின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பதிலையும் அலச வேண்டியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஜெய்சங்கர் பேசும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. 2009ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியா வந்து சேர்ந்த இந்தியர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று மிகவும் மேம்போக்கான பதிலை கொடுத்திருப்பதுதான் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு காரணமாக அமைந்தது.

நாடு கடத்தப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. மருந்துக்காகவாவது அமெரிக்காவின் இந்த செயலை கண்டித்திருக்கலாம் என்று கூறி பிரேசில், வெனிசுலா, கொலம்பியா நாடுகளுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை ஒருபக்கம் போய் கொண்டிருக்க, இதோ சட்டவிரோதமாக குடியேறிய 500 இந்தியர்களின் பட்டியலை அமெரிக்கா தயார் செய்து விட்டது. இவர்களும் விரைவில் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான சூழலில் இனி வரும் விமானங்களிலாவது இந்தியர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் யாவரையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், ஆள்கடத்தலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அமெரிக்காவில் குடியே... மேலும் பார்க்க

'தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? - அரசுக்கு வேல்முருகன் கேள்வி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?' என அரச... மேலும் பார்க்க

Ranjith: "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா முதல்வரே?" - ஸ்டாலினிடம் பா.ரஞ்சித் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை குறிப்பிட்டு, "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா... மேலும் பார்க்க

"விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க காரணம்... மத்திய அரசு ஏஜென்ஸிகளின் ரிப்போர்ட்..." - அண்ணாமலை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞ... மேலும் பார்க்க

"என் தொகுதிக்கு வாங்க... ஒரு எம்எல்ஏ என்ன செய்ய முடியும் எனக் காட்டுகிறோம்" - வானதி சீனிவாசன்

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் மலரஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கோவை தெற்குதொகுதி எம்.எல்.ஏ-வும்... மேலும் பார்க்க