Manimegalai : `தொகுப்பாளினியாக மீண்டும் களமிறங்கும் விஜே மணிமேகலை... குவியும் வாழ்த்துகள்!'
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடன நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ்'. இதன் அடுத்த சீசன் விரைவிலேயே தொடங்க இருக்கிறது. மெகா ஆடிஷன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில் விரைவிலேயே இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/rxgg832u/1170x658withlogoefd8b830393b4c24b55ef6d9a047722f.webp)
இதுவரை இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்கள் ஆக இருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலமாக பல நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறார்கள். `சந்தியாராகம்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் குரு இந்த நடன நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் குழுவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. நடிகை சங்கீதாவிற்கு பதிலாக இந்த புதிய சீசனில் நடிகை வரலட்சுமி நடுவராக களம் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/5840c6f4-ce50-49f6-beb0-43ad753b59f3/Screenshot%20(25).png)
அத்துடன் விஜய் டிவியில் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழுக்கு என்ட்ரியாகி இருக்கிறார். மிர்ச்சி விஜயுடன் சேர்ந்து மணிமேகலை இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனையடுத்து மணிமேகலையின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.